Monday 31 October 2011

ஆறாம் அறிவு. (சவால் சிறுகதை - 2011)
இது கிழே உள்ள படத்துக்காக எழுதப்பட்ட போட்டி சிறுகதை.

ஒரு முடிவுக்கு வந்து விட்டார் துரை. இவ்வளவு நாளாக ஒரு புழு பூச்சியைப் போல் அற்பமாக மதிக்க பட்டவர்கள் காலில் விழுவதை தவிர வேறு வழியில்லை. வீட்டில் இருந்து வெளியில் இறங்கினார். டிரைவர் பணிவாக கார் கதவை திறந்தான். தேவைஇல்லை என்று கையால் சைகை காட்டியபடி அருகில் உள்ள மெக்கானிக் ஷெட்ட நோக்கி நடக்க துவங்கினார். காலை வெய்யில சுளீர் என அவர் முகத்தில் அறைந்தது.

* * *

நேற்று இரவு, மனைவி மறைவுக்கு பின் கண்ணுக்கு கண்ணாக வளர்த்து வரும் ஒரே மகள் ரேணுவின் அறை அருகாமையில் நடந்து போய் கொண்டிருந்தார் துரை. அவள் அறையில் உள்ள அவளது செல் போனில் மெசேஜ் வரும் சத்தம் கேட்டது. எதார்த்தமாக மேலும் இரண்டு அடி வைத்து நடக்கையில் இன்னும் ஒரு மெசேஜ் வரும் சத்தமும் கேட்டது. ஒரு கணம் நின்றார். ரேணு மதியம் சாப்பிடவில்லை என்று வேலைகார அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. காலையில் கூட சரியாக அவள் தன்னிடம் பேசவில்லை என்பது கூட மனதில் வந்து போனது. திரும்பி அவள் அறையை நோக்கினார். கதவு ஓரளவு திறந்திருந்தது. உள்ளே குளியலறையில் ரேணு குளித்துக் கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது.

மெதுவாக அறை கதவை தள்ளி உள்ளே போனார். மேசையில் ரேணுவின் செல் போன் இருந்தது. மெதுவாக எடுத்து மெசேஜ்களை நோட்டமிட்டவர் ஒரு கணம் அதிர்ந்தார். "என்ன முடிவு பண்ணின. கேக்கிற பணத்தை கொடுத்திட்டா உனக்கு நல்லது. இல்ல புழைப்பு நாறிடும்" என்று இருந்தது. அடுத்த மெசேஜ் "புத்திசாலி தனமா போலிசுக்கு போனா அடுத்த கணம் இன்டர் நெட் தான். நீ என்ன பண்ணினாலும் எனக்கு தெரியும்". மேலும் இதே ரீதியில் ஐந்து ஆறு மெசேஜ்கள் கடந்த 12 மணி நேரத்தில் மூன்று வெவேறு செல் நம்பர்களில் இருந்து. ஒரு கணம் யோசித்த துரை அருகில் உள்ள பேப்பரில் செல் நம்பர்களை குறித்துக் கொண்டார். கடைசியாக வந்த இரு மெசேஜ்களை மறக்காமல் அழித்து விட்டு, செல்லை முன்பிருந்தது போல் வைத்து விட்டு விரைந்து வெளியேறினார்.

தூக்கமே வரவில்லை. பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாய் செல்லம கொடுத்து அவள் வாழ்க்கையை குட்டி சுவராக்கி விட்டோமோ என்று துரை நொந்து கொண்டார். யாராக இருக்கும்? போட்டோவோ விடியோவோ வச்சிருப்பான் போல இருக்கு. அதில் என் மகள்.... அவரால் இதற்க்கு மேல் யோசிக்க முடியவில்லை. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவர் தன்னை அறியாமலே சோபாவில் தூங்கி போனார்.

***

மெக்கானிக் ஷெட்ட நெருங்கியவர் ஒரு கணம் தயங்கினார். இருக்காதா பின்ன. இந்த ஷெட்ட காலி பண்ண வைக்க எவ்வளவு தொல்லைகள் கொடுத்திருப்பார்.

மோட்டார் பைக்கை சரி செய்து கொண்டிருந்த சீனு அவரை பார்த்து விட்டான். "என்னடா பங்களாகாரர் இங்க நிக்கிறார்" என்று மெதுவாக அருகில் இருந்த ரங்கன் காதில் விழும் படி சொன்னான். "சுத்தம், இன்னைக்கு என்ன பிரச்சனையோ" என்று அலுத்து கொண்டான் ரங்கன். "சரி நான் பாத்துக்கிறேன்" என்று எழுந்து கொண்ட சீனு "என்ன சார் நம்ப கடையாண்ட..." என்றான்.

"உன்கிட்ட எனக்கு ஒரு உதவி ஆகணும்பா" என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தான் சீனு. "என்ன சார், சொல்லு" என்றவன் துரையின் தயக்கத்தை பார்த்து "சார் வேணும்னா ஷெட்டு பின்னால நம்ப ரூம் இருக்கு, உனக்கு ஓகேன்னா அங்க உக்காந்து பேசலாம்" என்றான். துரை சரி என தலை அசைத்து கொண்டே அவனை தொடர்ந்தார்.

மேசையுடன் கூடிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டவர் சீனுவின் கண்ணை பார்த்து "உங்களுக்கு தொல்லை குடுத்ததுக்காக என் பொண்ணு வாழ்க்கையில விளையாடாதீங்கப்பா" என்றார் உடைந்த குரலில். " என்ன சார், என்னனமோ சொல்ற. உனக்கு தான் சார் எங்கள புடிக்கல. எங்களுக்கு உன்னாண்ட எந்த பிரச்சனையும் இல்ல சார்" என்றான் சற்றும் எதிர்பாராத சீனு. "வேணும்னா நம்ப கட பசங்கள கூபிடுரன்; நீயே கேட்டுக்க சார்" என்றான். சீனுவின் வார்த்தைகளும் உடல் மொழியும் அவன் உண்மை பேசுவதாகவே துரைக்கு பட்டது. " சார் என்ன பிரச்சனைன்னு சொல்லனும்னா சொல்லு சார், சத்தியமா நம்பளால முடிஞ்ச உதவி பண்றன் சார்" என்று துரை கையை பிடித்து கொண்டான் சீனு. துரை மெல்லிய குரலில் முதல் நாள் இரவு நடந்தவைகளை கூறினார்.

அமைதியாக கேட்டு கொண்டிருந்த சீனு "நீ கலங்காத சார், சாயந்தரம் வரைக்கும் டைம் குடு. நான் பாத்துக்கிரன். நீ வீட்டுக்கு போ சார்" என்றான். "என் பொண்ணோட வாழ்க்கைப்பா" இப்பொது சீனு கையை பிடித்துக் கொண்டார் துரை. "புரியுது சார், ஒண்ணியும் கவலை படாம போ" என்றவன் துரையிடம் அவர் செல் நம்பரையும், அவர் குறித்து வைத்திருந்த மூன்று செல் போன் நம்பர்களையும் வாங்கி கொண்டான் சீனு.

துரையின் தலை மறைந்ததும், ரங்கனும் வேலுவும் சீனுவையே பார்த்தார்கள். அவர்களை அருகில் அழைத்துக் கொண்ட சீனு நடந்தவைகளை சொன்னான். "பொறுக்கி பசங்க, இதே வேலையா திரியிறாங்க" என்று உண்மையாகவே ஆதங்க பட்டன ரங்கன். "நீ என்ன பண்ணினாலும் எனக்கு தெரியும்" ன்னு மெசேஜ் இருக்கிறதால எவனாவது ஒருவன் வீட்ட நோட்டம் விட்டுகிட்டே இருக்கணும். அதுனால நேதில இருந்து எவனாவது சந்தேக படும் படியா இந்த பக்கம் பாத்தியான்னு" இருவரையும் கேட்டான் சீனு. " அண்ணே, நேத்து சாயந்திரமும், இன்னைக்கு காத்தலையும் ஒரு கருப்பு ஹெல்மெட் போட்ட வண்டி இந்த ரோட்டில அடிக்கடி அந்த பக்கமும் இந்த பக்கமும் போய்கிட்டிருந்து. ஒரு தபா நம்ப நாயர் கடையில் நிறுத்தி தம் கூட வாங்கினான்" என்றான் உற்சாகமாக வேலு. "மறுபடியும் பாத்தா சொல்லு" என்றபடி சிந்தனையில் ஆழ்ந்தான் சீனு.

***

துரைக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவராக போனை எடுத்து இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு போன் செய்தார். "இன்ஸ்பெக்டர் கோகுல்" என்றது மறு முனை. "சார், நான் மில் ஓனர் துரை.."என்று இழுத்தார் துரை. "சொலுங்க துரை, ஏதேனும் அவசரமா?" "இல்லை வந்து..." என்று துரை இழுக்கவும் " அப்ப ஒண்ணு பண்ணுங்க... நான் இப்ப ஒரு மீடிங்ல இருக்கிறேன்; ஒன் அவர் களிச்சு போன் பண்ணுங்க" என்று பதிலுக்கு காத்திராமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இயலாமையும், ஏமாற்றமும் துரை முகத்தில் ஒட்டிக கொண்டது.

***

"அண்ணே அவன் தாண்ணே" வேலு காட்டிய திசையில் பார்த்தான் சீனு. கருப்பு நிற பைக்கில் கருப்பு ஹெல்மெட் போட்ட அவன் நாயர் கடையில் சிகரெட் வாங்கி கொண்டிருந்தான். நொடிக்கு ஒரு தடவை துரை வீட்டை பார்த்து கொண்டான். சீனு, ரங்கனை அருகில் கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னான். புரிந்தவனாக ரங்கன் நாயர் கடையை நோக்கி நடந்து சென்றான். சீனு, பாக்கெட்டில் இருந்து துரை கொடுத்த மூணு நம்பர்கள் கொண்ட பேப்பரை எடுத்தான். நிமிர்ந்து பார்த்தான். அவன் இன்னும் அங்கேயே இருந்தான். ரங்கன் நாயருடன் பேச்சு கொண்டுத்து கொண்டிருந்தான். சீனு தன் செல்லை எடுத்து பேப்பரில் இருந்த ஒரு நம்பருக்கு டயல் செய்து காதில் வைத்து மறுபக்கம் மணி ஒலிக்கிறதா என்று பார்த்தான்.

திடீரென பதட்டமான கருப்பு ஹெல்மெட், அவசரமாக தோளில் இருந்த பையில் இருந்து போனை எடுத்து உற்றுப் பார்ப்பதை சீனு பார்த்தான்.  அவனை நோக்கி முன்னேறினான். இப்போ கருப்பு ஹெல்மட் போனை எடுக்காமலே பையில் போட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய தாயாரானான். அவனை பின்புறமாக நெருங்கிய சீனு "சார்" என்று கூப்பிட்டான். அவன் திரும்பிய கணத்தில் தயாராய் இருந்த ரங்கன் வண்டி சாவியை உருவி பையில் போட்டு கொண்டான். ஒரே நேரத்தில் சீனும் ரங்கனும் அவன் தோளில் அழுத்தமாக கையை போட்டு "பேசாம என்கூட வந்துடீன்னா உனக்கு நல்லது என்றான்" சீனு. கருப்பு ஹெல்மெட் எதுவும் பேசவில்லை. சீனுவும் ரங்ககனும் அவன் தோளில் போட்ட கைகளை அழுத்தியவாறே அவனுடன் மெக்கானிக் ஷெட்ட நோக்கி நடந்தனர்.

***

மெக்கானிக் ஷெட்டின் பின் அறையில் அவன் நாற்காலியில் கட்டப்பட்டிருந்தான். கன்னம் வீங்கியிருந்தது. அப்போது தான் துரை உள்ளே வந்திருந்தார். "சொல்லுடா நாயே... எதுக்கு பண்ணின" கையில் இருந்த சபானரை ஓங்கினான் சீனு. "சொல்றேன் சொல்றேன் என்று சொல்ல தொடங்கினான்.

"போனவாரம் மாபலிபுரம் ரோட்டில இருக்கிற ஒரு ரிசார்ட்டுக்கு போயிருந்தேன். அங்க அந்த வீட்டு பொண்ணு ஒரு பையன் கூட பைக்கில வந்திருந்துது. ரெண்டு பெரும் டக்கீலா சாப்பிட்டாங்க.பொண்ணு பாக்க பெரிய இடத்து பொண்ணா இருக்கேன்னு, தண்ணி அடிக்கிறத எல்லாம் என் செல்லுல வீடியோ எடுத்து கிட்டேன். அப்புறம் அவங்க இரண்டு பேரும் கொஞ்சம் ஒதுக்கு புறமா கட்டி புடிச்சுகிட்டு அரையும் குறையுமா இருந்ததையும் வீடியோ எடுத்து கிட்டேன். அப்புறம் அவங்க கிளம்பும் போது அந்த பொண்ணு அவ செல்ல கீழ தவற விட்டதையும் பாத்தேன். அதை எடுத்து என் போனுக்கு ஒரு மிஸ் கால் பண்ணிட்டு, அந்த பண்ணின கால அழிச்சிட்டு, மேடம்னு கூப்பிட்டு செல்ல அவங்க கிட்டயே குடுத்திட்டன். தாங்ஸ்ன்னு வாங்கி கிட்டாங்க. அப்புறம் அவங்கள பின் தொடர்ந்து வந்தபோ, அந்த பையன் காலேஜ் விடுற டைமா பாத்து அவள கால்ஜ் வாசல்ல இறக்கி விட்டான். அப்புறம் கொஞ்ச நேரத்தில ஒரு கார் வந்திச்சு. அதுல அந்த பொண்ணு ஏறி போனபோ பின் தொடர்ந்து அவ வீட்டையும் பாத்துகிட்டேன். அப்ப கூட எனக்கு இந்த எண்ணம தோனல. ஆனா முந்த நாள் துபாயில ஒரு கம்பியூட்டர் ஆபரேட்டர் வேலை இருக்கு ஒரு லட்சம் கட்டினா அடுத்த வாரமே போகலாம்னு என் பிரண்டு சொன்னான். திடீர்ன்னு பணத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியல.  உக்காந்து யோச்சப்போ தான் இந்த ஐடியா வந்திச்சு. பணக்கார பொண்ணு. எடுத்த வீடியோவ காட்டி ரெண்டு லட்சம் வாங்கலாம்ன்னு பிளான் பண்ணி தான் போன் பண்ணி பேசினேன். அப்புறம் மெசேஜ் அனுப்பினன்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

"இப்போ அந்த வீடியோ எங்க இருக்கு?" என்றார் துரை. "இந்த செல் போன் மெமரி கார்டில இருக்கு" என்றான் அவன்.  அப்போது "அண்ணே இந்த பை அவன் அவன் வண்டியில மாட்டி இருந்திச்சு"ன்னு அறையினுள் வந்தான் வேலு. "இது என்னடா பை" என்று அவனை பார்த்து மிரட்டினான் சீனு. "சத்தியமாய் என்னது இல்ல சார். தெரு கோடியில வண்டி திரும்புறப்போ ரோட்டில கிடந்திச்சு. எடுத்து வச்சுகிட்டேன்" என்றான். சீனு மேசை மீது பையை வைத்து உள் இருந்தவற்றை வெளியே எடுத்தான். அதில் ஒரு டைரி, ஒரு செல் போன் மற்றும் ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்தது. டைரியை எடுத்து விரித்தான்.

(பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்)

அதில் இரண்டு துண்டு சீட்டுகள் இருந்தது. எடுத்து மேசையில் வைத்து படித்தான், அப்போது அந்த பையில் இருந்து எடுத்த செல்ல போன் விசில் போல கூவியது. எடுத்து பார்த்தான். விஷ்ணு இன்பார்மர் காலிங் என்று ஸ்கிரீனில் வந்தது.


துரையை நிமிர்ந்து பார்த்தான். காலை கட் பண்ணுமாறு சைகை காட்டினார் துரை. சீனு சிகப்பு எழுத்தை அமுக்கி போனை மேசையில் வைத்து விட்டு துரையை கேள்விகளுடன் பார்த்தான். துரை தனது செல் போனை எடுத்து கால் பண்ணினார். மறு முனையில் "இன்ஸ்பெக்டர் கோகுல்" என்றது குரல்.
"சார் துரை".
"மீட்டிங் முடிஞ்சிரிச்சு, சொல்லுங்க துரை"
"சார் என் வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற மெக்கானிக் ஷெடுக்கு கொஞ்சம் வர முடியமா?"
"என்ன விஷயம், எனி திங் சீரியஸ்?"
"ரெண்டு கேசு சார். ஒண்ணு நாங்களே சால்வ் பண்ணிட்டோம். இன்னொண்ணு நீங்களே வந்து பாத்து கண்டு புடியுங்க சார்" என்று சிரித்து கொண்டே திருப்தியுடன் நிம்மதியாக போனை கட் செய்தார் துரை.

*****

6 comments:

  1. :) வலுக்கட்டாயமாக படத்தை திணித்து விட்டீர்களா? நன்றாக இருந்தது கதை.

    டக்கீலா என்றால் போதை பானமா?

    வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி ராதாகிருஷ்ணன். படத்துடன் பொருந்துகிறது அல்லவா! அத்தோடு விட்டுடுவோம். டகீலா பத்தி http://en.wikipedia.org/wiki/Tequila.

    மீண்டும் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. நன்றி ராஜஜெஸ்வரி.

    ReplyDelete
  4. குறியீடுகளை இன்ஸ்பெக்டரையே சால்வ் செய்யுமாறு வைத்து விட்டீர்களே?! நல்ல ஐடியா! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி மிடில்கிளாஸ்மாதவி. கொடுக்கப்பட்ட குறியீடுகளை எப்படி பயன் படுத்த போகிறார் என்பதையே ஒரு சஸ்பென்சாக வைத்து எழுத வேண்டும் என்று யோசித்ததால் விழைந்த கதை இது. வருகைக்கும், உங்கள் மேலாய கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. இன்று ரிசல்ட், வெற்றி பெற வாழ்த்துகள்..

    ReplyDelete

உங்கள் மேலான கருத்து சகல வயதினரும் படிக்கக் கூடியவகையில் இருப்பதை உறதி செய்தபின் பிரசுரிக்கப்படும். நன்றி!

Your kind comments are published after moderation. Thanks!